சரக்கு வேன் கவிழ்ந்து 30 பெண்கள் படுகாயம் சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் விபத்து

திருவையாறில் சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் சரக்கு வேன் கவிழ்ந்து 30 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-11-17 22:15 GMT
திருவையாறு,

அரியலூர் மாவட்டம் கரைவெட்டிபரதூர், முடிகொண்டான், விரகாலூர் ஆகிய கிராமங்களில் இருந்து விவசாய பணிக்காக 30 பெண்களை ஏற்றி கொண்டு ஒரு சரக்கு வேன் நேற்று காலை தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது விளாங்குடி- திருவையாறு தேசிய நெடுஞ்சாலை கஸ்தூரிபாய் நகர் என்ற இடத்தில் சென்ற போது சாலையின் குறுக்கே நாய் ஓடியுள்ளது. இதை பார்த்த சரக்கு வேன்டிரைவர், நாய் மீது மோதாமல் இருக்க பீரேக் பிடித்துள்ளார். இதனால் சரக்கு வேன் கவிழ்ந்தது.

30 பெண்கள் படுகாயம்

இந்த விபத்தில் சரக்கு வேனில் பயணம் செய்த கரைவெட்டிபரதூரையை சேர்ந்த பஞ்சவர்ணம், உமாமகேஸ்வரி, சந்திராகாந்தி, லெட்சுமி(வயது50), காசியம்மாள், பழனியம்மாள்(55), அம்சு, செல்வவதி, செல்லம்மாள், சுமதி, சரசு, சசிகலா, பரிமளா, செந்தாமரை, காத்தாயி, முடிகொண்டானை சேர்ந்த அம்மாக்கண்ணு உள்பட 30 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சரக்கு வேனில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு குலசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி, போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயம் அடைந்த பெண்களை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் ஆபத்தான நிலையில் இருந்த லெட்சுமி, பழனியம்மாள் ஆகிய 2 பேரையும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆறுதல்

விபத்து ஏற்பட்டு 1 மணி நேரமாகியும் 108 ஆம்புலன்ஸ் வரவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருவையாறு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் இளங்கோவன், திருமானூர் ஒன்றிய செயலாளர் குமரவேல், திருவையாறு நகர செயலாளர் செந்தில்குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் செந்தில்மணி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும் செய்திகள்