கர்நாடகத்தில் நின்ற லாரி மீது சுற்றுலா பஸ் மோதல் : மும்பையை சேர்ந்த 6 பேர் நசுங்கி சாவு

கர்நாடகத்தில் லாரி மீது சுற்றுலா பஸ் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-11-17 22:42 GMT
உப்பள்ளி,

மும்பையில் இருந்து சுற்றுலா சென்றவர்களுக்கு இந்த சோக சம்பவம் நேர்ந்துள்ளது. இந்த கோர விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் இருந்து கதக் வழியாக பல்லாரி மாவட்டம் ஹம்பி நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ், தார்வார் மாவட்டம் அன்னிகேரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பத்ராபூர் அருேக கோலிவாடா கிராஸ் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. பின்னர் பஸ் சாலையோரம் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் தனியார் பஸ்சின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியது. மேலும் பஸ்சில் இருந்தவர்கள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது பஸ்சின் இடிபாடுகளிடையே சிக்கி பெண்கள் உள்பட 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்திருந்தனர். மேலும் 21 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். படுகாயமடைந்த 21 பேரையும் அந்தப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அன்னிகேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

19 பேரின் உடல் நிலை மோசமாக இருந்ததால், அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருசிலரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் சாவு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. 2 பேருக்கு அன்னிகேரி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அன்னிகேரி போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அவர்கள், உடல் நசுங்கி பலியான 6 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அன்னிகேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர்கள் மும்பையை சேர்ந்த விஸ்வநாத் (வயது 76), தினகர் (74), ரமேஷ் ஜெயபால் (70), லாகு கிரிலோஸ்கர் (65), சுசித்ரா (65), சுமிதா (65) என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், மும்பையில் இருந்து 40 பேர் தனியார் பஸ்சில் கர்நாடக மாநிலத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் கடந்த ஒரு வாரமாக கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்தனர். இந்த நிலையில், இறுதியாக பல்லாரி மாவட்டம் ஹம்பிக்கு சென்றுவிட்டு மும்பைக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி அவர்கள் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் இருந்து ஹம்பிக்கு பஸ்சில் சென்றபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. மேலும் பஸ்சில் பயணம் செய்த அனைவரும் வயதானவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த கோர விபத்தில் 6 பேர் பலியாகி, பலர் காயம் அடைந்ததால் மும்பையில் உள்ள அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். மேலும் குடும்பத்தினர் மும்பை விரைந்தனர்.

இதுகுறித்து அன்னிகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

மேலும் செய்திகள்