சுகாதார சீர்கேடு ஓட்டல்கள், திருமண மண்டபத்துக்கு அபராதம்

மாமல்லபுரத்தில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்ட ஓட்டல்கள், திருமண மண்டபத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2018-11-18 22:30 GMT
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, திருக்கழுக்குன்றம் தாசில்தார் வரதராஜன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) மகேஸ்வரன், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள் தனியார் மாமல்லபுரம் கடற்கரை விடுதிகள், திருமண மண்டபம், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.

மாமல்லபுரம் கடற்கரையில் தங்கும் விடுதியுடன் காணப்பட்ட நட்சத்திர ஓட்டலில் ஆய்வு செய்தபோது கொசுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதி சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டது. உடனடியாக அந்த ஓட்டலுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தார். அதேபோல் சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டதாக மாமல்லபுரம் டி.கே.எம். சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு ரூ.10 ஆயிரம், ஒரு ஓட்டலுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன் மூலம் அறிவிப்பாணை வழங்கி அபராத தொகையை உடனடியாக வசூலிக்க மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு பிறப்பித்தார்.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் கண்ணந்தாங்கல் ஊராட்சியில் தனியார் டயர் தயாரிக்கும் தொழிற்சாலை கட்டுவதற்கு கட்டுமான பணி நடந்து வருகிறது. கட்டுமான பணியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்குவதற்கு அருகிலேயே 150 கொட்டகை அமைத்துள்ளனர்.

தொழிலாளர்கள் உபயோகிக்கும் கழிவறை, தங்கும் இடம் ஆகியவற்றில் காஞ்சீபுரம் உதவி இயக்குனர் (ஊராட்சி) கமலகண்ணன், ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சீதா.சீனிவாசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இங்கு கழிவறைகள் சுகாதாரமில்லாமல் இருந்ததும், மேலும் அங்கு தேங்கி இருந்த தண்ணீரில் ஏராளமான டெங்கு கொசு புழு இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபாரதம் விதித்து மேலும் கட்டுமான பணி முடியும் வரை தொழிலாளர்கள் தங்கும் இடத்தை சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும் என எச்சரித்தனர்.

இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் எடையார்பக்கம் பகுதியில் ஆய்வு செய்தபோது கிராம உதவியாளர் ஜெகன்நாத் என்பவர் தன் வீட்டின் அருகே உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கழிவுநீர் தொட்டி கட்டியதும் அதன் உள்ளே குடிநீர் குழாய் செல்வதும் தெரியவந்தது.

அனுமதி இல்லாமல் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கழிவுநீர் தொட்டி கட்டிய ஜெகன்நாத்தை எச்சரித்து அதை இடிக்க உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்