மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

எண்ணூரில் பூட்டிய வீட்டுக்குள் தொழிலாளி, தூக்கில் பிணமாக தொங்கினார். மனைவி கோபித்து சென்றதால் அவர் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Update: 2018-11-18 22:00 GMT
திருவொற்றியூர்,

எண்ணூர் சுனாமி குடியிருப்பு 38-வது பிளாக்கை சேர்ந்தவர் சங்கர் (வயது 48). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகின்றனர். சங்கர் தனது மனைவி மகாலட்சுமியுடன் வசித்து வந்தார்.

சங்கருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்குவந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவருடைய மனைவி, கணவருடன் கோபித்துக்கொண்டு மகள்கள் வீட்டுக்கு அல்லது உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் மகாலட்சுமி, கணவருடன் கோபித்துக்கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். சங்கர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். 3 நாட்களாக அவரது வீட்டின் கதவு பூட்டியே கிடந்தது.

நேற்று காலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். பூட்டிய வீட்டுக்குள் சங்கர், மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த எண்ணூர் போலீசார், தூக்கில் தொங்கிய சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி கோபித்து சென்றதால் மனம் உடைந்த சங்கர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்