புயல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கோரி திருவரங்குளத்தில் 3 இடங்களில் சாலை மறியல்; போலீஸ் தடியடி

புயல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கோரி திருவரங்குளத்தில் 3 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போலீசார் தடியடி நடத்தி பொது மக்களை கலைந்து போக செய்தனர்.

Update: 2018-11-18 23:00 GMT
திருவரங்குளம்,

கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் பல இடங்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இந்நிலையில் திருவரங்குளம் அருகே உள்ள வேப்பங்குடி ஊராட்சி தேத்தான்பட்டி கிராமத்தில் ஏராளமான மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. கடந்த 3 நாட்களாக இப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. அதுமட்டுமின்றி குடிநீரும் கிடைக்கவில்லை. மேலும் ஏராளமான வீடுகளும் புயலால் சேதம் அடைந்துள்ளன.

நேற்று வரை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் வரவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும் அதிகாரிகள் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் தேத்தான்பட்டி கிராமத்தில் கூடினர். பின்னர் அவர்கள் திருவரங்குளம் கடைவீதிக்கு வந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், குடிநீர், மின்சாரம் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 9 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டம் 11 மணி வரை நீடித்தது. அதுவரை அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனையடுத்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் புயலால் முறிந்து விழுந்த மரங்களை ரோட்டில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஜானகிராமன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து அதிரடிபடை போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர். போலீசார் நடத்திய தடியடியில் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதே போல் திருவரங்குளம் அருகே உள்ள பாரதியார்நகரில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதேபோல திருவரங்குளம் அருகே உள்ள வம்பன்நாலுரோட்டில், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாத அதிகாரிகளை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற அதிரடிப்படை போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.

மேலும் செய்திகள்