கொடைக்கானலில் நிரம்பி வழியும் நட்சத்திர ஏரி: கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கொடைக்கானல் நட்சத்திர ஏரி நிரம்பி வழிவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2018-11-18 23:15 GMT
கொடைக்கானல்,

‘கஜா’ புயல் காரணமாக கொடைக்கானல் நகர் பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அத்துடன் சாலைகளும் சேதமடைந்தன. குறிப்பாக ஏரிச்சாலையில் அதிக மரங்கள் விழுந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அந்த மரங்களை அகற்றும் பணியில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சாலைகளையும் தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த மழை காரணமாக சேதமடைந்த சாலைகள், கழிவுநீர் வாய்க்கால்கள் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது பெய்த மழையின் காரணமாக நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகள் நிரம்பி வழியும் தருவாயில் உள்ளன. நேற்றைய நிலவரப்படி கொடைக்கானல் பழைய அணையின் நீர்மட்டம் 20 அடியாக (மொத்த உயரம் 21 அடி) உயர்ந்தது. இன்னும் ஒரு அடி உயர்ந்தால் உபரிநீர் வெளியேறும் நிலை ஏற்படும். இதேபோல புதிய அணையும் நிரம்பும் சூழ்நிலையில் உள்ளது. இதன் காரணமாக நகருக்கு 6 மாதங்களுக்கு குடிநீர் சீராக வழங்கும் நிலை உள்ளது.

கொடைக்கானல் என்றவுடன் சுற்றுலா பயணிகளின் நினைவுக்கு வருவது அங்குள்ள நட்சத்திர ஏரி தான். அங்கு படகு சவாரியில் சுற்றுலா பயணிகள் ஈடுபடுவர். தற்போது நட்சத்திர ஏரி நிரம்பி அதிக அளவு உபரிநீர் வெளியே செல்வதால் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் செல்லும் வழிகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் சீரமைப்பு பணியில் நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மழையில் அவர்கள் நனையாமல் இருப்பதற்காக நகராட்சியின் சார்பாக மழைகோட்டுகள் வழங் கப்பட்டன. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆணையாளர் முருகேசன் கலந்துகொண்டு மழைகோட்டுகளை பணியாளர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகரமைப்பு அலுவலர் முருகானந்தம், சுகாதார ஆய்வாளர் சுப்பையா, கணக்காளர் பிச்சைமணி, வருவாய் ஆய்வாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நகராட்சி ஆணையாளர் முருகேசன் நிருபர்களிடம் கூறுகையில், கொடைக்கானலில் தற்காலிக பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் 24 மணி நேரமும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக் கானலில் சேதமடைந்த சாலைகள், பாலங்கள் குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு அவை சீரமைக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்