சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் சுப.உதயகுமார் பங்கேற்பு

சபரிமலை செல்லும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி தெற்கு எழுத்தாளர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சுப.உதயகுமார் கலந்து கொண்டார்.

Update: 2018-11-19 23:00 GMT
நாகர்கோவில்,

சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்கச் செல்லும் பெண் பக்தர்களுக்கு உரிய முறையில் பாதுகாப்பு வழங்க வேண்டும், ஆண்– பெண் பாலின சமத்துவத்தை நிலைநிறுத்த வேண்டும், தீட்டு என்கிற பெயரில் பெண்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் போக்கை மாற்ற வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு எழுத்தாளர் இயக்கம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு எழுத்தாளர் இயக்க நிர்வாகி வக்கீல் திருத்தமிழ் தேவனார் தலைமை தாங்கினார். பச்சைத் தமிழகம் கட்சி தலைவரும், கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமார், குமரி மாவட்ட பெண்கள் போராட்டக்குழு சவுமினி, பெண்கள் இணைப்புக்குழு சுதா, செல்லத்தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் சுப.உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:–

 மார்த்தாண்டத்தில் கட்டப்பட்டுள்ள பாலம் ஆட்டம்காணும் நிலையில் உள்ளது. எனவே பாலத்தின் உறுதித்தன்மை குறித்து மக்களிடம் முறையாக விளக்கம் அளிக்கப்பட வேண்டும். இந்த பணியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுவதால் இதுகுறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5–வது மற்றும் 6–வது அணு உலைக்கான பூமிபூஜை ரகசியமாக நடைபெற்றுள்ளது. மக்களுக்கு பயன்படும் நல்ல திட்டம் என்றால் அதை ஏன் ரகசியமாக செய்ய வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் புதிய வீரியத்துடன் மீண்டும் நடைபெறும்.

குமரி மாவட்டத்தில் மண், கல் போன்ற கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இதற்கு தமிழக அரசுதான் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்