கோபியில் பரபரப்பு தையல் கூட்டுறவு சங்கத்தை பெண்கள் முற்றுகை

கோபியில் தையல் கூட்டுறவு சங்கத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-19 22:00 GMT

கடத்தூர்,

கோபி வாஸ்துநகர் பகுதியில் மகளிர் தையல் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்திற்கு தலைவர், துணைத்தலைவர் மற்றும் 5 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு கோபி, பவானி, சத்தியமங்கலம், கவுந்தப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1,100 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்தநிலையில் சங்க உறுப்பினர்கள் அந்த சங்கத்தை திடீரென முற்றுகையிட்டு கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் கூறுகையில், கூட்டுறவு சங்கத்தில் தையல் பயிற்சி பெற்றுள்ள எங்ககளுக்கு தமிழ்நாடு அரசு இலவச சீருடை வழங்கும் திட்டத்தின்கீழ் பள்ளிக்கூட மாணவ–மாணவிகளின் சீருடை துணிகள் மொத்தமாக பிரித்து வழங்கப்பட்டு, குறிப்பிட்ட அளவில் தைத்து மீண்டும் சங்கத்திற்கு வழங்கி வந்தோம். இதற்காக அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சீருடை துணிகளை, சங்க உறுப்பினர் அல்லாத வேறு சிலருக்கு வழங்கப்படுகிறது. இதனால்தான் நாங்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர். அதற்கு போலீசார் முறைப்படி அனைவருக்கும் தைக்க வேண்டிய சீருடை துணிகள் பிரித்து வழங்கப்படும். மேலும் சங்க உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கு வழங்கப்படாது என்று கூறினார்கள்.

இதனை ஏற்றுக்கொண்டு கூட்டுறவு சங்க பெண் உறுப்பினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்