உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் புகைப்பட கண்காட்சி ஜெர்மனி தூதர் தொடங்கி வைத்தார்

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் நடந்த புராதன சின்னங்கள் பற்றிய புகைப்பட கண்காட்சியை ஜெர்மனி தூதர் கரின்ஸ்டோல் தொடங்கி வைத்தார்.

Update: 2018-11-19 22:30 GMT
மாமல்லபுரம்,

இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ்நாடு அரசு கலை மற்றும் கலாசார துறையால் மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் நேற்று முதல் 25-ந்தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது.

இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் புராதன சின்னங்களின் முக்கியத்துவம் மற்றும் புராதன நினைவிடங் களை போற்றி பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

இதையொட்டி நேற்று மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம் ஆகிய புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கட்டணம் இன்றி இலவசமாக கண்டுகளிக்க அனுமதிக்கப்பட்டனர். திரளான பயணிகள் தங்கள் குடும்பத்துடன் மாமல்லபுரம் வருகை தந்து புராதன சின்னங்களை இலவசமாக கண்டுகளித்தனர். இதனால் கடற்கரை கோவில் அருகில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

முதல் நாளான நேற்று கடற்கரை கோவில் அருகில் புராதன சின்னங்கள் பற்றிய புகைப்பட கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சென்னை வட்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.

இதில் ஜெர்மனி தூதர் கரின்ஸ்டோல், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட பொதுமக்களும் புகைப்பட கண்காட்சியை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

இதில் தொல்லியல் உதவி அலுவலர் காயத்ரி, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் வட்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளர் பரணிதரன், மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டல் மேலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்