பணிநிரந்தரம் செய்யக்கோரி 108 ஆம்புலன்சு டிரைவர்கள் போராட்டம்

பணிநிரந்தரம் செய்யக்கோரி 108 ஆம்புலன்சு டிரைவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-11-19 22:30 GMT

புதுச்சேரி,

புதுவை சுகாதாரத்துறையில் இயங்கும் 108 ஆம்புலன்சு சேவையில் புதுவையில் 63 பேரும், காரைக்காலில் 35 பேரும், மாகியில் 17 பேரும், ஏனாமில் 11 பேரும் டிரைவர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.8 ஆயிரம் வழங்கப்படுகிறது.

அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும், ஆம்புலன்சு சேவைக்கு தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்கவேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி வருகிற 24–ந்தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிகின்றனர். நேற்று அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.

அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவ தலைவர் சேஷாச்சலம் தொடங்கிவைத்தார். புதுவை அரசு டிரைவர்கள் சங்க பொறுப்பாளர்கள் ராமநாதன், ஹரிராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். ஆம்புலன்சு டிரைவர்கள் சங்க பொதுச்செயலாளர் யோகநந்தன், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் லூர்துநாதன், துணைத்தலைவர் முனுசாமி, துணை செயலாளர் சந்திரசேகரன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

வருகிற 26–ந்தேதி முதல் 30–ந்தேதி வரை நீல நிற பட்டை அணிந்து பணிபுரிகிறார்கள். டிசம்பர் 6–ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்