கேரள அரசை கண்டித்து புதுவையில் 26–ந்தேதி முழுஅடைப்பு; பாரதீய ஜனதா அறிவிப்பு

கேரள அரசை கண்டித்து புதுவையில் வருகிற 26–ந்தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

Update: 2018-11-20 22:45 GMT

புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

கேரளாவில் இந்து மக்களுக்கும், நம்பிக்கைக்கும் எதிராக பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு அரசு செயல்பட்டு வருகிறது. சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் 100–க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் சபரிமலைக்கு செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்துள்ளனர். கேரள அரசின் நடவடிக்கையினால் சபரிமலை செல்லும் பக்தர்கள் பாதுகாப்புடன் திரும்ப முடியுமா? என்ற அச்சத்துடன் உள்ளனர்.

சபரிமலை மீதும், கலாசாரத்தின் மீதும் நம்பிக்கை உள்ளதால் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த பெண்கள் சபரிமலைக்கு செல்வதில்லை என்று சபதம் எடுத்துள்ளனர். ஆனால் கேரள அரசு சட்டவிரோதிகளை அனுப்பி சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் செயலை செய்து வருகிறது.

சபரிமலையின் புனிதத்தை குலைக்கவேண்டுமென்றே கம்யூனிஸ்டு அரசு செயல்பட்டு வருகிறது. கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்தும், சபரிமலையின் புனிதத்தை காக்கக்கோரியும் வருகிற 26–ந்தேதி புதுவை மாநிலத்தில் முழுஅடைப்பு (பந்த்) போராட்டம் நடத்த உள்ளோம். இந்த முழு அடைப்பு போராட்டம் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறும்.

இந்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு அய்யப்ப பக்தர்கள், வணிகர்கள், பஸ் உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்