கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் குறைந்து வரும் வைகை அணை நீர்மட்டம்

கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணையின் நீர்மட்டம் 63 அடியாக குறைந்துள்ளது.

Update: 2018-11-21 22:00 GMT
ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் உயரம் 71 அடி ஆகும். தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக இந்த ஆண்டில் 2 முறை அணை முழுக்கொள்ளளவை எட்டியது. அணையில் இருந்து மதுரை, திருமங்கலம், மேலூர் பகுதிகளின் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

‘கஜா‘ புயல் காரணமாக கடந்த வாரம் வைகை அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்தது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கண்மாய்களுக்காக தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. ஏற்கனவே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் மள, மளவென குறைய தொடங்கியது. மேலும் வைகை அணைக்கான நீர்வரத்தும் கணிசமாக குறைந்தது.

இதன் எதிரொலியாக, கடந்த வாரம் 68 அடியாக இருந்த வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 63 அடியாக குறைந்து விட்டது. சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளுக்கு இன்னும் 5 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளுக்குநாள் நீர்வரத்தும் குறைந்து கொண்டே இருக்கிறது.

அணையில் இருந்து, கடந்த சில தினங்களாக வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று காலை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. அதன்படி திறக்கப்படுகிற தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,560 கன அடியாக குறைக்கப்பட்டது. நாளை அல்லது நாளை மறுநாள் முதல் மீண்டும் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட இருப்பதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் 5 மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 63.58 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 913 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கும், மதுரை மாநகர குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினாடிக்கு 1,560 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

மேலும் செய்திகள்