பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கரூரில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-21 23:00 GMT
கரூர்,

மாவட்ட தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில துணை தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் ராஜதுரை (கரூர்), முருகேசன் (ஈரோடு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கரூர் மாவட்ட தலைவர் இளங்கோவன் மற்றும் சுதாகர், சீனிவாசன், சென்னியப்பன் உள்பட டாஸ்மாக் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். டாஸ்மாக் பணியாளர்கள் மதுவிற்பனை தொகையை இரவில் கடைகளிலேயே வைத்து செல்வது பாதுகாப்பானதாக இருக்காது என்பதால் அதனை வீட்டிற்கு எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதனை மர்ம நபர்கள் நோட்டமிட்டு பணியாளர்களை தாக்கி பணம் பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனால் பணியாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், சென்னையிலுள்ள நடைமுறைப்போல் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் சில்லரை விற்பனை தொகையை அன்றாடம் கடைகளிலேயே வந்து பெற்று செல்லும் நடைமுறையை அமலுக்கு கொண்டுவர வேண்டும். மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றியவர்களுக்கு உடனடியாக மாற்று பணி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்