‘கஜா’ புயல் காரணமாக கொடைக்கானலில் 7,400 ஏக்கர் விவசாய பயிர்கள் நாசம்

கொடைக்கானல் பகுதிகளில் ‘கஜா’ புயல் காரணமாக 7 ஆயிரத்து 400 ஏக்கர் பயிர்கள் நாசமானதாக தோட்டக்கலை துணை இயக்குனர் நாராயணசாமி கூறினார்.

Update: 2018-11-22 22:00 GMT
கொடைக்கானல்,

‘கஜா’ புயலினால் கொடைக் கானல் பெரும் பாதிப்பை சந்தித்தது. கொடைக்கானல் மேல்மலைப்பகுதிகளில் உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, பீன்ஸ், கேரட் போன்ற பல்வேறு வகையான காய்கறி பயிர்களும், கீழ் மலைப்பகுதிகளில் காபி, மிளகு, ஆரஞ்சு, பட்டர்புரூட் போன்ற பணப்பயிர்களும் நாசமாயின. இதுதவிர பிளம்ஸ், பேரிக்காய் மரங்களும் ஒடிந்தன.

இதையொட்டி சேதமடைந்த பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணிகளில் தோட்டக்கலைத் துறையினரும், வருவாய்த்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கொடைக்கானலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று கணக் கெடுப்பு செய்வதுடன், விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் நாராயணசாமி கூறியதாவது:-

‘கஜா’ புயல் காரணமாக கொடைக்கானல் தாலுகாவில் சேதம் அடைந்த பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு செய்யும் பணி நடந்து வருகிறது. இதில் தோட்டக்கலை, வருவாய்த்துறை அலுவலர்கள் தலா 20 பேர் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்ட கணக்கெடுப்பில் கொடைக்கானல் தாலுகாவில் 7 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது தெரிய வந்தது. பூண்டி கிராமத்தில் வெள்ளைப்பூண்டு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறி பயிர்கள் சேதமடைந்துள்ளன.

அதிகபட்சமாக கீழ் மலைப்பகுதிகளில் காபி, மிளகு போன்ற பயிர்கள் அதிகமாக சேதமடைந்துள்ளது. இதன்படி முதற்கட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பின்னர் அடுத்த கட்ட கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் இறுதி அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்