மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் சாவு மனைவியை காப்பாற்ற சென்ற போது பரிதாபம்

திங்கள்சந்தை அருகே மின்சாரம் தாக்கிய மனைவியை காப்பாற்ற சென்ற லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-11-22 22:30 GMT
அழகியமண்டபம்,

திங்கள்சந்தை அருகே உள்ள தலக்குளம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் என்கிற சேகர் (வயது 36), லாரி டிரைவர். இவருக்கு புனிதா என்கிற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இவர்களின் வீட்டின் முற்றத்தில் துணி காயப்போடுவதற்காக கம்பி கட்டப்பட்டு இருந்தது. அந்த கம்பியின் ஒரு முனை வீட்டுக்கு மின்சாரம் வரும் சர்வீஸ் வயர் கட்டியிருந்த கம்பியில் சுற்றியிருந்ததாக தெரிகிறது.

நேற்று காலையில் சேகரின் மனைவி புனிதா துணி காயப்போடுவதற்காக சென்றார். மின்கசிவு காரணமாக அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததாக தெரிகிறது. துணி காயப்போட சென்ற புனிதா மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் புனிதா அலறி துடித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்த சேகர் மனைவியை காப்பாற்ற விரைந்து ஓடினார். அவர் மனைவியை பிடித்து இழுத்து வீசினார். அப்போது புனிதா மின்சாரத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு கீழே விழுந்தார். அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

ஆனால், சேகர் நிலைகுலைந்து மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த கம்பியின் மீது விழுந்தார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர். அவர்கள் மின் இணைப்பை துண்டித்து சேகரின் உடலை மீட்டனர்.

இதுகுறித்து இரணியல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்