கடல் சீற்றத்தால் 7 வீடுகள் இடிந்தன: தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் சாலை மறியல்

வானூர் அருகே கடல் சீற்றத்தால் 7 வீடுகள் இடிந்து விழுந்தன. கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-22 22:30 GMT
வானூர்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் பொம்மையார்பாளையம் மீனவர் கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது. இங்கு கடல் சீற்றத்தின்போது மண் அரிப்பு ஏற்பட்டு கடற்கரையை ஒட்டிய வீடுகள் இடிந்து விழுவது வழக்கம். சுனாமி தாக்கியபோது ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததை தொடர்ந்து, மீனவர்கள் பாதுகாப்பாக குடியிருக்க மேடான பகுதியில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. அங்கு தற்போது மீனவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு கடற்கரையை ஒட்டிய பயனற்ற வீடுகள் அவ்வப்போது இடிந்து வருகின்றன. படகுகளை நிறுத்த இடமின்றியும், மீன்பிடி வலைகளை பாதுகாப்பாக வைக்க முடியாமலும் மீனவர்கள் தவிக்கின்றனர். கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்கவேண்டும் என்று மீனவர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடல் சீற்றம் காரணமாக நேற்று அதிகாலை 7 வீடுகள் இடிந்து விழுந்தன. 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்தன. இதையடுத்து பொம்மையார்பாளையம் மீனவர்கள், கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்கக்கோரி புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த வானூர் தாசில்தார் ஜோதிவேல், கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, இன்ஸ்பெக்டர் திருமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தூண்டில் வளைவு அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மீனவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.

மேலும் செய்திகள்