ராமநத்தம் அருகே தடுப்புக்கட்டையில் கார் மோதல்; கல்லூரி மாணவர் பலி, 4 பேர் காயம்

ராமநத்தம் அருகே தடுப்புக்கட்டையில் கார் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார். மேலும் இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.

Update: 2018-11-22 23:03 GMT
ராமநத்தம்,

சென்னையை அடுத்த திருவள்ளூரை சேர்ந்தவர் முத்தையா (வயது 78). இவர் நாகர்கோவிலில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் செல்ல முடிவு செய்தார். அதன்படி, நேற்று காலை முத்தையா ஒரு காரில் நாகர்கோவிலுக்கு குடும்பத்துடன் புறப்பட்டார். அவருடன் முத்தையா மனைவி காளஸ்வரி (61), மகள் பவானிலதா (46), மருமகள் ஆனந்தி (30), பேரன் பிரதீஷ் (17), பேத்தி தன்ஷிகா (6) ஆகியோர் சென்றனர். காரை அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் ஓட்டிச் சென்றார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வந்தபோது, அவர்கள் காரை நிறுத்திவிட்டு ஓட்டலில் சாப்பிட்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் காரில் நாகர்கோவில் நோக்கி புறப்பட்டனர். அப்போது காரை கல்லூரி மாணவர் பிரதீஷ் ஓட்டினார்.

அந்த கார், கடலூர் மாவட்டம் எழுத்தூரில் வந்த போது, பிரதீஷின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையோர தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் தன்ஷிகா, ராஜேஷ்குமார் காயமின்றி உயிர்தப்பினர். காரில் இருந்த மற்ற 5 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயத்துடன் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்தனர்.

இதை பார்த்த பாதசாரிகள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 1 மணிநேரம் போராடி காரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் செல்லும் வழியிலேயே பிரதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்