புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை தேவைகள் கிடைக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் டி.டி.வி.தினகரன் பேட்டி

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை தேவைகள் கிடைக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

Update: 2018-11-23 22:30 GMT
கந்தர்வகோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளான தெத்துவாசல்பட்டி, புனல்குளம், காடவராயன்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, எஸ்.சோழகம்பட்டி, கந்தர்வகோட்டை நகரம் உள்ளிட்ட பகுதிகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். அவர் எஸ்.சோழகம்பட்டியில் புயலால் பாதிக்கப்பட்ட வாழை தோட்டம் மற்றும் மரவள்ளி பயிர்களை நேரில் பார்வையிட்டு சேதம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் கந்தர்வகோட்டை காந்தி சிலை மற்றும் கடைவீதி வழியாக பஸ் நிலையம் சென்று அங்கு திறந்த வேனில் நின்றபடி பொது மக்களிடம் பேசினார். மழையின் காரணமாக தனது பயணத்தை ரத்து செய்து, நவம்பர் 26, 27-ந் தேதிகளில் மீண்டும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை நேரில் சந்திப்பதாக கூறிவிட்டு, அவர் தஞ்சாவூர் புறப்பட்டார். அவருடன் கட்சி நிர்வாகிகள் தங்க.தமிழ்ச்செல்வன், திருச்சி மனோகரன், சாருபாலா தொண்டைமான், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன், அறந்தாங்கி எம்.எல்.ஏ ரெத்தினசபாபதி, வடக்கு மாவட்ட செயலாளர் குழ.சண்முகநாதன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் முத்து, கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளர் ஜி.ஆர்.செங்கொடியான், தொகுதி செயலாளர் துருசுப்பட்டி நாராயணசாமி மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் சென்றனர்.

இதற்கிடையே அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-

மக்களை நேரில் சந்திக்க தைரியம் இல்லாத முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் காரிலே அமர்ந்துக் கொண்டு சேதங்களைப் பற்றி விவரங்களை கேட்கின்றனர். மேலும் டெல்டா மாவட்ட பகுதிகளான நாகை, திருவாரூர், தஞ்சாவூர், வேதாரண்யம், பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் எந்த அமைச்சர் களோ, அரசு உயர் அதிகாரிகளோ, இதுவரை நேரில் பொதுமக்களை சந்தித்து நிவாரண பணிகளை செய்யவில்லை. மக்களை சந்திக்கவே பயந்து ஹெலிகாப்டர்களிலும், அரசு வாகனங்களிலும் வலம் வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வீடுகள், விளை நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் ஆகியவற்றை கிராம நிர்வாக அதிகாரிகளோ, விவசாய அதிகாரிகளோ நேரில் சென்று கணக்கெடுக்கவில்லை. மாநில அரசு நிவாரண பணிகளை சிறப்பாக செய்தால், அதை வரவேற்போம். மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம், போக்குவரத்து, உணவு ஆகியவை உடனே கிடைக்க மாநில அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்