வேப்பந்தட்டை அருகே: போலீசார் என்று கூறி நாடகமாடிய 3 பேர் கைது - தப்பியோடியவருக்கு வலைவீச்சு

வேப்பந்தட்டை அருகே போலீசார் என்று கூறி நாடகமாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-11-23 22:00 GMT
வேப்பந்தட்டை, 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாண்டகப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தனக்கொடி(வயது 65). இவருக்கு சின்னசாமி(47), செல்வராஜ்(46) என 2 மகன்கள் உள்ளனர். இதில் 2 மகன்களுக்கும் நிலம் பிரித்துக் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனக்கொடி வி.களத்தூர் போலீசில் செல்வராஜ் மகன் செல்வக்குமார் மீது புகார் கொடுத்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வக்குமார் வீட்டிற்கு 4 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் போலீஸ் என எழுதப்பட்டு இருந்தது.

அப்போது அவர்கள் செல்வக்குமாரிடம் நாங்கள் போலீஸ் உன்னை கைது செய்ய வந்துள்ளோம். வண்டியில் ஏறு எனக்கூறி மிரட்டியுள்ளனர். அப்போது செல்வக்குமார் எந்த ஊர் போலீஸ்நிலையத்தில் இருந்து வருகிறீர்கள் என அவர்களிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த செல்வக்குமார் வி.களத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசாருதீன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் வந்த நபர்கள் தப்பி ஓட முயன்றனர். அப்போது அவர்களில் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். மற்றொருவன் தப்பியோடி விட்டான்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அகரம் சீகூரை சேர்ந்த மணிகண்டன்(20), கீழப்பெரம்பலூரை சேர்ந்த மற்றொரு செல்வகுமார்(21), வசிஷ்டபுரத்தை சேர்ந்த வீரசிங்கம்(19) என்பதும், தப்பியோடியவன் கீழ்மத்தூரை சேர்ந்த விஜயகுமார்(25) என்பதும், அவர்கள் 4 பேரும் தனக்கொடியின் தூண்டுதலின் பேரில் போலீசார் போல் நாடகமாடியதும் தெரிய வந்தது. பின்னர் போலீசார் மணிகண்டன், செல்வகுமார், வீரசிங்கம் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய விஜயகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்