தம்பியை போலீசார் அழைத்து சென்றதால் அவமானம் தாங்காமல் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

தம்பியை போலீசார் அழைத்து சென்றதால் அவமானம் தாங்காமல் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பொதுமக்கள் சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-24 23:15 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் போலீஸ் நிலையத்திற்கு மாட்டு வண்டியில் மணல் கடத்துவதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிலால் உதயநத்தம் சாலையில் நின்றிருந்த சரக்கு வேனை எடுத்து சென்ற போலீசார் அதன் டிரைவர் கலியமூர்த்தி மகன் சத்தியமூர்த்தி(வயது 30) இல்லாத காரணத்தால் அவரது தம்பி கணேசனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் சத்தியமூர்த்தி வந்த பிறகு கணேசனை அனுப்பி வைப்பதாக தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் போலீசார் தனது தம்பியை அழைத்து சென்றதை அறிந்த சத்தியமூர்த்தி அவமானம் தாங்காமல் அணைக்குடம் அருகே உள்ள தைலமர தோப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அப்பகுதியில் ஆடு, மாடு மேய்த்தவர்கள் பார்த்தனர். பின்னர் இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலை கைப்பற்றி மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு வந்து சிலால் பஸ் நிறுத்தத்தில் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் சாலையில் வைத்து போலீசாரை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சத்தியமூர்த்தி உறவினர்கள் கூறியதாவது:- வெறும் வண்டியாக நின்று கொண்டிருந்த சரக்கு வேன் அருகில் மணலை போட்டு மணல் கடத்தியதாக போலீசார் பொய்யான வழக்கு பதிந்ததால் அவமானம் தாங்காமல் சத்தியமூர்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுகுறித்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட கூடுதல் துணை சூப்பிரண்டு பெரியய்யா, அரியலூர் மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தினேஷ்குமார், சண்முகம், ராமதாஸ், வசந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் குமரையா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சத்தியமூர்த்தியின் உடலை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலை கைவிடாமல் மறியலை தொடர்ந்தனர்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகளிடம் கூறுகையில், இறந்துபோன சத்தியமூர்த்தியின் தம்பி கணேசனையும், பறிமுதல் செய்த சரக்கு வேனையும் உடனே விடுவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்துபோன சத்தியமூர்த்தியின் குடும்பத்தாருக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்றனர்.

இதற்கு பதிலளித்த உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி, தங்களுடைய புகாரை மனுவாக எழுதி கொடுக்கும்படியும், அதனை மேலதிகாரிகளுக்கு அனுப்பி விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் மாலை 6 மணிக்கு உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனைவரும் விசாரணைக்காக வரவேண்டும் என கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

மேலும் செய்திகள்