பிறப்புச்சான்றுக்கு உரிய காலத்தில் பதிவு செய்ய தேவையான விவரங்களை பிரசவத்துக்கு வரும்போதே எடுத்து வர வேண்டும் கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தல்

பிறப்புச்சான்றுக்கு உரிய காலத்தில் பதிவு செய்ய தேவையான விவரங்களை பிரசவத்துக்கு வரும்போதே எடுத்து வர வேண்டும் என்று கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2018-11-24 22:45 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு பணிகள் குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். இதில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, சான்றிதழ் வழங்குதல் மற்றும் பேறுசார் குழந்தைகள் நல எண் பெறுதல் உள்ளிட்டவை குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து கலெக்டர் ஆசியா மரியம் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பிறப்பு, இறப்பு பதிவு மையங்களாக அறிவிக்கப்பட்டு சுகாதார ஆய்வாளர்கள் பிறப்பு இறப்பு பதிவாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் ஆஸ்பத்திரிகளில் இருந்து விடுவிக்கப்படும் முன்பே பிறப்பு சான்று இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பல்வேறு காரணங்களால் அரசு ஆஸ்பத்திரிகளில் பிறப்பு, இறப்பு பதிவு மையம் செயல்படாமல் போனதை கருத்தில் கொண்டு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையில் பணிபுரியும் பல்நோக்கு சுகாதார மேற்பார்வையாளர்கள் பிறப்பு, இறப்பு பதிவாளர்களாக நியமனம் செய்யப்பட்டு அரசு ஆணை வெளியிடபட்டது.

இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் முதல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 9 அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் பதிவாளர்கள் நியமிக்கப்பட்டு பிறப்பு, இறப்பு பதிவு மற்றும் சான்றிதழ் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. எனவே 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரசு ஆஸ்பத்திரிகளில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளுக்கு அந்தந்த அரசு ஆஸ்பத்திரிகளிலேயே சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோல் பிறப்புச்சான்றுக்கு உரிய காலத்தில் பதிவு செய்வதற்கு ஏதுவாக கர்்ப்பிணி பதிவு எண், தாய் மற்றும் தந்தை பெயர், ஆதார் எண், முகவரி போன்ற தேவையான விவரங்களை பிரசவத்திற்கு வரும்போதே எடுத்து வர வேண்டும். மேலும் பிறப்பு, இறப்பு பதிவு குறித்த கட்டணங்களை சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளர்கள் வசம் செலுத்தி உரிய ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே பொதுமக்கள் இந்த சேவையை முழுமையாக பயன்படுத்தி பிறப்புச்சான்றை இலவசமாக பெறுவதோடு, குழந்தைகளுக்கு பெயர் வைத்தவுடன் பிறப்பு பதிவேட்டில் குழந்தையின் பெயரை பதிவு செய்து பெயருடன் கூடிய பிறப்புச்சான்றை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்