தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இறுதி அஞ்சலி நடிகர் அம்பரீஷ் உடல் தகனம் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நடந்தது

பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் நடிகர் அம்பரீஷ் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Update: 2018-11-26 23:30 GMT
பெங்களூரு,

நடிகரும், முன்னாள் மத்திய-மாநில மந்திரியுமான அம்பரீஷ் கடந்த 24-ந் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு 66 வயது. அவருக்கு சுமலதா என்ற மனைவியும், அபிஷேக் என்ற மகனும் உள்ளனர். அம்பரீசின் உடல் பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள அவரது வீட்டில் கடந்த 24-ந் தேதி இரவு முழுவதும் வைக்கப்பட்டிருந்தது.

அதன்பிறகு அவரது உடல், நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, நடிகர் ரஜினிகாந்த் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 4 மணிக்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் அம்பரீசின் உடல் மண்டியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அன்று மாலை 6 மணிக்கு, விசுவேஸ்வரய்யா விளையாட்டு மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அம்பரீசின் உடல் வைக்கப்பட்டது.

அங்கு நேற்று காலை 9 மணி வரை பொதுமக்கள் வரிசையில் வந்து அம்பரீசின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். சுமார் 2 லட்சம் பேர் அஞ்சலி செலுத்தியதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில் அம்பரீசின் உடல், விமானப்படை ஹெலிகாப்டரில் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பிறகு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து அம்பரீசின் உடல், ஆம்புலன்ஸ் வாகனத்தில் கன்டீரவா விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து, 1,800 கிலோ பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த பிரத்யேக வாகனத்தில் அம்பரீசின் உடல் எடுத்து வைக்கப்பட்டு, ஊர்வலமாக கன்டீரவா ஸ்டூடியோவுக்கு கொண்டு வரப்பட்டது. அம்பரீசின் பூத உடல் இருந்த வாகனத்தில் மனைவி சுமலதா, மகன் அபிஷேக் ஆகியோர் உடன் வந்தனர்.

பகல் 12.30 மணிக்கு தொடங்கிய இறுதி ஊர்வலம் பிற்பகல் 3.45 மணிக்கு கன்டீரவா ஸ்டூடியோவுக்கு வந்தடைந்தது. 13 கிலோ மீட்டர் தூரத்தை 3¼ மணி நேரம் கடந்து அம்பரீசின் உடல் இருந்த வாகனம் அல்சூர் கேட், கெம்பேகவுடா ரோடு, மைசூரு வங்கி சர்க்கிள், காவேரி சந்திப்பு, யஷ்வந்தபுரா மேம்பாலம், கொரகுன்டேபாளையா வழியாக நந்தினி லே-அவுட் பகுதியில் கன்டீரவா ஸ்டூடியோவுக்கு வந்தடைந்தது. இந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்ற னர். வழிநெடுகிலும் சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் மற்றும் ெபாதுமக்கள் திரண்டு நின்று, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அம்பரீஷ் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தை சுற்றிலும் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அம்பரீசின் உடல் கன்டீரவா ஸ்டூடியோவுக்கு வந்தடைந்தபோது, சுமலதாவுக்கு மயக்கம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்து, தகன மேடை அருகே அமர வைத்தனர்.

அதன் பிறகு ஒக்கலிகர் சமூக முறைப்படி, இறுதிச்சடங்கு நடைபெற்றது. சுமார் 1 மணி நேரம் இந்த சடங்கு நடந்தது. முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், கர்நாடக மேல்-சபை தற்காலிக தலைவர் பசவராஜ் ஹொரட்டி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, எஸ்.எம்.கிருஷ்ணா, கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், மந்திரிகள் டி.கே.சிவக்குமார், எச்.டி.ரேவண்ணா, ஜெயமாலா, டி.சி.தம்மண்ணா, சா.ரா.மகேஷ், கே.ஜே.ஜார்ஜ், சி.எஸ்.புட்டராஜூ, எம்.பி.க்கள் டி,.கே.சுரேஷ், சிவராமேகவுடா, மேயர் கங்காம்பிகே. ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி, டி.ஏ.ஷரவணா எம்.எல்.சி., முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக்.

முன்னாள் மத்திய மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, நடிகர்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், அர்ஜூன், தர்ஷன், யஷ், நிகில், கணேஷ், ரமேஷ் அரவிந்த், மோகன்பாபு, ஜக்கேஷ், கணேஷ், சுமன், நடிகைகள் சரோஜாதேவி, தாரா, இயக்குனர் ராஜேந்திரசிங்பாபு, ராக்லைன் வெங்கடேஷ், நகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் உள்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு அம்பரீஷ் உடலுக்கு கர்நாடக அரசு சார்பில் முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. 21 குண்டுகள் முழங்க, அம்பரீசின் உடல் தகனம் செய்யப்பட்டது. மறைந்த நடிகர் ராஜ்குமாரின் சமாதி அருகே, அம்பரீசின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பா கடைசியாக அம்பரீசின் கன்னத்தில் மனைவி சுமலதா கண்ணீர் சிந்தியபடி முத்தமிட்டு பிரியா விடை கொடுத்தார். இது அங்கு இருந்தவர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தியது.

மாலை 6 மணிக்கு அம்பரீஷ் உடல், மரக்கட்டைகளால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிதைக்கு அவரது மகன் அபிஷேக், தீ வைத்தார். கதறி அழுதபடி அவரது மகன் இறுதிச்சடங்குகளை செய்தார். இறுதிச்சடங்குக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கர்நாடக அரசு சார்பில் செய்யப்பட்டிருந்தது.

இதையொட்டி நகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் தலைமையில் 11 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கன்டீரவா ஸ்டூடியோவை சுற்றிலும் உள்ள சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

மேலும் செய்திகள்