சாலைகளை சீரமைக்கக்கோரி நாகர்கோவில் நகராட்சி முன் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்கக்கோரி நகராட்சி அலுவலகம் முன் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Update: 2018-11-26 22:21 GMT

நாகர்கோவில்,

நாகர்கோவில் நகராட்சிப்பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும், அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாகர்கோவில் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

கடந்த சட்டசபை தேர்தலின்போது வாக்கு சேகரிக்க சென்ற என்னிடம் நாகர்கோவில் நகரின் 52 வார்டு மக்களும் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, சாக்கடை வசதியை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நானும் அவற்றை நிறைவேற்றித்தருவதாக உறுதி அளித்ததின்பேரில் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்தார்கள். ஆனால் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர முடியாத அளவில் இந்த நகராட்சி நிர்வாகம் உள்ளது. எனவே இந்த நகராட்சி தேவையா? என்று கேட்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் சீரழிந்து கிடக்கும் சாலைகளின் விவரத்தையும், அவற்றை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும் நான் நகராட்சி ஆணையரிடம் பல முறை மனு கொடுத்துள்ளேன். ஆனால் மனு கொடுக்கும்போதெல்லாம் ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுபோல் நடித்துவிட்டு, நான் சென்றபிறகு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இங்கு 8 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். அதற்கு ஆணையர் பொறுப்பேற்க வேண்டும். நகரில் சாக்கடைகளை சீர் செய்து, குப்பைகளை அகற்றி இருந்தால் இத்தனைபேர் இறந்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. விரைவில் நாங்கள் மனுக்கள் மூலம் தெரிவித்த கோரிக்கைகளின்படி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். பாதாள சாக்கடைத்திட்டப் பணிகள் தொடங்கி பல ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் பணிகள் நிறைவடையாமல், சாலைகள் அனைத்தும் குண்டும், குழியமாக காட்சி அளிக்கிறது. எனது தொகுதி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். அவர்களுக்காக போராடுவேன். எனது உயிர் போனாலும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நான் பாடுபடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நாகர்கோவில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், ஆணையரைக் கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

முன்னதாக நாகர்கோவில் நகர செயலாளர் வக்கீல் மகேஷ் வரவேற்று பேசினார். முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. இரா.பெர்னார்டு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். மாவட்ட பொருளாளர் கேட்சன், மீனவரணி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் நசரேத் பசலியான் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் தில்லைச்செல்வம், லாரன்ஸ், சேக்தாவூது, எம்.ஜே.ராஜன், எப்.எம்.ராஜரெத்தினம், பெஞ்சமின், தாமரைபாரதி, மதியழகன், சாய்ராம், ஜெமிலா ஜேம்ஸ், பாலஜனாதிபதி, அழகம்மாள்தாஸ் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, கிளை, வட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தையொட்டி நகராட்சி அலுவலகம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்