மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க உதவும் குழுக்கள் - தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தலில் சிரமமின்றி வாக்களிப்பதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் குழுக்கள் அமைக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-11-28 22:00 GMT
திண்டுக்கல், 

நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வாக்காளர்களும், வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுவாக தேர்தல் என்றாலே சுமார் 30 சதவீதம் பேர் வாக்களிக்க வருவதில்லை.

இதில் மாற்றுத்திறனாளிகளும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இதற்கு அவர்கள் சந்திக்கும் சிரமங் களே ஆகும். ஒருசில மாற்றுத்திறனாளிகள் பிறரின் உதவி இல்லாமல் வெளியே செல்ல முடியாத நிலையில் இருப்பார்கள்.

மேலும் அவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதற்கு பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது. இதற்காகவே ஒருசிலர் தேர்தலில் வாக்களிக் காமல் ஒதுங்கி கொள்கின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு தேர்தல் நேரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் குழுக்களை அமைக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அந்த வகையில் கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர், கல்வி அலுவலர் உள்பட 10 பேரை கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இதுதவிர சட்டமன்ற தொகுதி வாரியாகவும் குழுக்கள் அமைக்கப்படும்.

இந்த குழுவினர் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குச்சாவடி வாரியாக மாற்றுத்திறனாளி வாக்காளர்களை கணக்கெடுப்பார்கள். மேலும் வாக்குப்பதிவு நாளில் அவர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பார்கள். இதற்காக வாக்குச்சாவடி மையங்களில் சக்கர நாற்காலிகள், சாய்வுதளம் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

மேலும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல்லில் மாவட்ட மற்றும் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மாற்றுத்திறனாளிகள் நலக்குழு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

மேலும் செய்திகள்