குந்தாவில் கடும் பனிப்பொழிவு: தேயிலை செடிகள் கருகியதால் விவசாயிகள் கவலை

குந்தா தாலுகாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக தேயிலை செடிகள் கருகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2018-11-28 22:00 GMT
மஞ்சூர்,

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக விளங்கி வருவது பச்சை தேயிலை விவசாயம் ஆகும். இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். குந்தா தாலுகாவில் மட்டும் சுமார் 18 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு நல்ல மழை பெய்ததால், பெரும்பாலான விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களில் உரமிட்டனர். இதனால் தேயிலை மகசூல் அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. பகலில் வெயிலும், மாலையில் குளிரும் வாட்டி வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை எமரால்டு, காந்திகண்டி, முள்ளிக்கூர் ஆடா, அண்ணாநகர், லாரன்ஸ், பாலாடா, கல்லக்கொரை, மணியட்டி, மீக்கேரி, நஞ்சநாடு உள்பட பல்வேறு பகுதிகளில் உறைபனி கொட்டியது. இதனால் புல்வெளிகளிலும் மற்றும் தேயிலை செடிகளிலும் பனி படர்ந்து இருந்ததை காண முடிந்தது. இதன் காரணமாக மேற்கண்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த தேயிலை செடிகள் கருகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

மேலும் பச்சை தேயிலையை உடனடியாக பறிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பனி காரணமாக வேலை கிடைக்காமல், தோட்ட தொழிலாளர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்