தமிழக அரசு மேற்கொள்ளும் புயல் நிவாரண பணி வெறும் கண்துடைப்பு டி.டி.வி.தினகரன் பேட்டி

தமிழக அரசு மேற்கொள்ளும் புயல் நிவாரண பணி வெறும் கண்துடைப்பு என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

Update: 2018-11-28 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டிளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மக்களை சந்திக்க வரவில்லை. மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். இதனால்தான் புயல் பாதித்த பகுதி மக்களை சந்திக்க முதல்-அமைச்சர் வந்துள்ளார்.

தற்போது முதல்-அமைச்சர் நாகை, திருவாரூர் பகுதியில் ஆய்வு மேற்கொள்வது, மத்திய குழுவும், தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கையும் கண்துடைப்பு தான். மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்து முதற்கட்டமாக ரூ.5 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கியிருக்க வேண்டும்.

மத்திய குழு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து அவர்கள் நிவாரண தொகை அறிவிப்பதற்குள் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள். தமிழக அரசு இடைத்தேர்தலை நடத்த மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் கட்டாயமாக 8 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெறவில்லை என்றால் ஆட்சி போய் விடும் என்ற பயத்தில் தேர்தலை நடத்த மாட்டார்கள்.

பாராளுமன்ற தேர்தலுடன் வைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்தத் தேர்தலிலும் தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக இல்லை. மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டுதான் உள்ள னர். மேகதாதுவாக இருக்கட்டும், ஸ்டெர்லைட் ஆலையாக இருக்கட்டும் தமிழக அரசு கோட்டை விடும். வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கும் பொழுது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எப்படி எதிர்ப்பார். பல்வேறு விஷயங்களுக்கு கருத்து தெரிவிக்கும் மோடி, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கும், கஜா புயல் தாக்கத்திற்கு ட்விட்டரில் கூட எந்த ஒரு வருத்தமும் தெரிவிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன், அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் உள்பட பலர் உடனிருந்தனர். முன்னதாக தஞ்சையில் இருந்து புதுக்கோட்டை வந்த டி.டி.வி தினகரன் இச்சடியில் ராணிரமாதேவியை சந்தித்து ஆசிபெற்றார்.

இதேபோல் டி.டி.வி.தினகரன் கறம்பக்குடி, ஆலங்குடி பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்கினார்.

மேலும் செய்திகள்