மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2018-11-28 22:45 GMT
கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் மற்றும் உறுப்பினர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பது தமிழக விவசாயிகள் மற்றும் மக்களை வஞ்சிக்கும் செயலாக உள்ளது. இந்த அனுமதியை திரும்ப பெறுவதற்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுத்து அணை கட்டுவதை தடுக்க வேண்டும். ஏற்கனவே மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களால் தமிழக விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காது.

எனவே, தமிழகத்தில் இருந்து கர்நாடகம் செல்லும் நெய்வேலி மின்சாரத்தை நிறுத்தி வைத்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். மேலும் கஜா புயலை தேசிய பேரிடராக அறிவித்து அதற்கான முழு நிவாரணத்தையும் மத்திய அரசு வழங்கவேண்டும். காவிரியில் திருட்டுதனமாக மணல் அள்ளி இயற்கை வளத்தை சுரண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர், இது குறித்து கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

மேலும் செய்திகள்