ஒரு தென்னை மரத்திற்கு ரூ.1,500 என்பது போதாது கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஒரு தென்னை மரத்திற்கு ரூ.1,500 என்பது போதாது, கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2018-11-29 23:00 GMT
பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:–

கஜா புயல் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. புயலினால் சேதம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்றாலும், அதன் பிறகு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஆனால் தமிழக அரசின் நிவாரண பணிகள் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

13 நாட்கள் கடந்த நிலையிலும் இதுவரை மின் இணைப்பு பெரும்பாலான இடங்களில் வழங்கப்பட்டவில்லை. முகாம்களில் அடிப்படை வசதிகள் செய்துவில்லை. இதனால் நிவாரண முகாம்களை விட்டு மக்கள் வெளியேறி கொண்டிருக்கின்றனர். புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும்.


கஜா புயலால் தென்னை மரங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. ஒரு தென்னை மரத்திற்கு ரூ.1,500 நிவாரணம் என்பது போதாது. எனவே கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும். சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்களை அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு 5 வருடத்திற்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். மாநில அரசு கோரும் நிதியை மத்திய அரசு மறுக்காமல் வழங்க வேண்டும்.

பிரதமர் மோடி, கஜா புயல் பாதிப்பு பற்றி கண்டுகொள்ளாமல் உள்ளார். மத்திய அரசு அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. மக்கள் நலன் குறித்து அக்கறை இல்லை. இவ்வாறு கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் கோ.நீலமேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, ஆர்.காசிநாதன், பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் எஸ்.கந்தசாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்