புதுச்சேரியில் இருந்து தஞ்சாவூருக்கு: காரில் கடத்திய 1,711 மதுபாட்டில்கள் பறிமுதல்

புதுச்சேரியில் இருந்து தஞ்சாவூருக்கு காரில் கடத்திய 1,711 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-11-29 22:00 GMT
சிதம்பரம், 

சிதம்பரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனஜா, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி, மத்திய புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் நேற்று ஆலப்பாக்கம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை போலீசார் வழிமறித்தனர். போலீசாரை பார்த்ததும், டிரைவர் நிற்காமல் காரை வேகமாக ஓட்டிச்சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், போலீஸ் வேனில் விரட்டிச்சென்று ஆலப்பாக்கம் ரெயில்வே கேட் அருகே அந்த காரை மடக்கினர்.

அப்போது ஒருவர் காரில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் காரில் இருந்த 2 பேரை பிடித்து, காரை சோதனை செய்தனர். அப்போது காரின் பின்பக்கம் 35 அட்டை பெட்டிகளில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,711 மதுபாட்டில்கள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பிடிபட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் டிரைவர் அய்யப்பன்(27), தஞ்சாவூரை சேர்ந்த அறிவழகன்(29) என்பதும், புதுச்சேரியில் குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி, அதனை தஞ்சாவூரில் விற்பனை செய்வதற்காக காரில் கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவழகன், கார் டிரைவர் அய்யப்பன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,711 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்