புயலால் உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு நிவாரண உதவி அமைச்சர்கள் வழங்கினர்

வேதாரண்யத்தில் புயலால் உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு நிவாரண உதவியை அமைச்சர்கள் வழங்கினர்.

Update: 2018-12-03 23:00 GMT
வேதாரண்யம்,

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கஜா புயலால் உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஓ.எஸ் மணியன், அன்பழகன், உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளின் உரிமையாளர்கள் 49 பேருக்கு ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினர். பின்னர் அமைச்சர் உதயகுமார் பேசும் போது கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மனித உயிரிழப்புகள் அதிக அளவில் தடுக்கப்பட்டுள்ளன. புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும். இன்னும் சில நாட்களில் இழப்பீடு தொகை பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல புயலில் உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு கீழ்வேளூர் வட்டாரத்தில் உயிரிழந்த உரிமையாளர்கள் 371 பேருக்கு ரூ.43 லட்சத்து 14 ஆயிரத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தாசில்தார் தையல்நாயகி, ஒன்றிய அ.தி. மு.க செயலாளர் எம்.சிவா.நகர செயலாளர் ஜே.பி.முரளி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்