காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதி வழங்கியதற்கு கண்டனம்: திருச்சியில் மோடி உருவ பொம்மை எரிப்பு

காவிரியின் குறுக்கே அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து திருச்சியில் பிரதமர் மோடி உருவ பொம்மையை எரித்த விவசாயிகள் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-12-03 23:00 GMT
மலைக்கோட்டை,

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் கர்நாடக மாநிலம் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அணை கட்டுவதற்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டமும் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அதன் மாவட்ட தலைவர் ம.ப.சின்னத்துரை தலைமையில் நேற்று காலை திருச்சி காவிரி ஆற்றுப் பாலத்தில் கூடினார்கள். அவர்களில் ஒருவர் கையில் கருப்பு கொடி வைத்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பிய அவர்கள் திடீரென மோடி உருவ பொம்மையை அங்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த உருவபொம்மையை தீ வைத்து கொளுத்தினார்கள். திடீரென நடைபெற்ற இந்த போராட்டத்தினால் காவிரி பாலத்தில் போக்குவரத்து தடைபட்டு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் அங்கு வந்த கோட்டை போலீசார் சின்னத்துரை உள்பட 10 விவசாயிகளை கைது செய்து, சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த திடீர் போராட்டம் தொடர்பாக சின்னத்துரை நிருபர்களிடம் கூறுகையில் ‘தேசிய ஒருமைப்பாட்டையும், இந்திய இறையாண்மையையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் காலில் போட்டு மிதிக்கும் வகையில் பிரதமர் மோடி காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட அனுமதி வழங்கி இருக்கிறார். இதனால் தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கர் பாசன நிலப்பரப்புகள் பாலைவனமாகும். 21 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டு விடும். அதனால் தான் மோடியின் உருவ பொம்மையை எரித்து எங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளோம், என்றார்.

பின்னர் கைதான அனை வரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்