சாலையோரங்களில் உள்ள மரங்களை வெட்டினால் நடவடிக்கை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

சாலையோரங்களில் உள்ள மரங்களை வெட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2018-12-03 23:00 GMT
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து கிராமங்களிலும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கவும், காய்ச்சல் போன்ற நோய்களால் அவதிப்படும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பல மாவட்டங்களில் இருந்தும் வந்துள்ள மருத்துவக்குழுக்களை கிராமங்களுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி புளிச்சங்காடு கைகாட்டியில் நடந்தது. இந்த குழுக்களில் டாக்டர்கள், செவிலியர்கள், கிராமங்களில் பிளிச்சிங் பவுடர் தெளிக்கும் குழுவினர், கொசு மருந்து தெளிக்கும் குழுவினர் இணைந்திருந்தனர். மருத்துவக்குழு தொடக்க விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு ஒவ்வொரு வாகனத்திலும் உள்ள சிறப்புகளை கேட்டறிந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அந்த பகுதியில் காத்திருந்த மக்களை சந்தித்தார். அப்போது பல பெண்கள் தங்களது வயல்களில் தென்னை, பலா விவசாயம் அனைத்தும் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் செய்ய வாங்கிய கடன்களை கட்டமுடியாத நிலையில் இருக்கிறோம். அதனால் விவசாய கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர். தென்னை மற்றும் பல்வேறு மரங்கள், பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கேட்டனர். தமிழக அரசு அது பற்றி நல்ல முடிவுகள் எடுக்கும், விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:- சாலை ஓரங்களில் சாய்ந்துள்ள மரங்களை அந்தந்த பகுதி இளைஞர்கள் வெட்டி அகற்றி போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தினர். நெடுஞ்சாலைத்துறையினர் வரவில்லை. ஆனால் தற்போது சாய்ந்த மரங்களை வெட்டி எடுப்பது போல நல்லநிலையில் நிற்கும் பச்சை மரங்களையும் வெட்டி எடுக்கிறார்கள். இதனால் சாலை ஓரங்களில் நிழல் இல்லாமல் பாதிக்கப்பட உள்ளது என்றனர். பச்சை மரங்கள் வெட்டப்பட்டால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல கீரமங்கலம் பகுதியில் பச்சை மரங்கள் வெட்டியிருப்பதை ஆய்வு செய்த பிறகு அதிகாரிகள் புகார் கொடுப்பார்கள். இதையடுத்து காவல் துறை நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டிடம் தகவல் கொடுத்திருக்கிறது என்று அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புயல் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் தொற்று நோய் பாதிப்பு இல்லாத அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குளோரின் பவுடர்கள் தூவப்பட்டுள்ளது, மருத்துவக்குழுக்களும் சென்று முகாம்கள் நடத்துகிறார்கள். மின்சாரம் வழங்கும் பணிகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது என்றார்.

மின்கம்பங்களில் ஏறி வேலை செய்யும் ஊழியர்களுக்கு கேரளா அரசு உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஹெல்மெட், காலனி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி உள்ளார்கள். ஆனால் தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் உயிர் பலி நடந்துள்ளது. காயமடைந்துள்ளனரே? என்ற கேள்விக்கு, அண்டைமாநில மின்வாரிய ஊழியர்களும் வந்து பணி செய்வதால் மின்சாரம் வழங்கும் பணிகள் வேகமாக நடக்கிறது. பாதுகாப்பாகவே வேலை செய்கிறார்கள். அதனால் தான் விபத்துகள் தடுக்கப்பட்டுள்ளது என்றார். 

மேலும் செய்திகள்