ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைவது உறுதி; அமைச்சர் மணிகண்டன் தகவல்

ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைவது உறுதி என்று அரசு ஆஸ்பத்திரி விழாவில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.

Update: 2018-12-03 22:45 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பொதுப்பணித்துறை (மருத்துவம்) சார்பில் ரூ.18 கோடி மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசியதாவது:– ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவிற்கென தனியாக தரை மற்றும் ஐந்து தளங்களுடன் கூடிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. கட்டிடப்பணிகளுக்கு ரூ.18 கோடியும், மருத்துவ உபகரணங்களுக்காக ரூ.2 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது. இந்த கட்டிடம் 77,600 சதுர அடியில் கட்டப்பட உள்ளது.

நோயாளிகளின் அவசர தேவைகளுக்காக 2 மின்தூக்கிகள் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. தரைத்தளம் முழுமையும் வெளிநோயாளிகள் பிரிவு, பிரசவ அவசர பிரிவு, மருந்தகம், ஆய்வகம் போன்ற வசதிகளும், 1–வது தளத்தில் பேறு காலத்திற்கு முன் கவனிப்பு மற்றும் அவசரகால அறுவை சிகிச்சை அரங்கமும், 2–வது தளத்தில் அதிதீவிர சிகிச்சை பிரிவு மற்றும் 2 அறுவை அரங்குகளும், 3–வது தளத்தில் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு, குடும்பநல பிரிவு மற்றும் முதல்–அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு பிரிவும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஏற்படுத்தப்படஉள்ளது.

மேலும் 4–வது தளத்தில் அறுவை சிகிச்சைக்குபின் கவனிப்பு பிரிவு, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவும், 5–வது தளத்தில் பேறுகால முன்கவனிப்பு பிரிவு ஆகியவையும் ஏற்படுத்தப்படவுள்ளன. இதேபோல இம்மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகை தரும் மக்கள் பயன்பெறும் விதமாக சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், வென்டிலேட்டர், மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான மேமோகிராம் போன்ற பல்வேறு நவீன மருத்துவ கருவிகள் செயல்பாட்டில் உள்ளன. இதுதவிர ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மக்களின் வசதிக்காக எனது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.12 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுஉள்ளது.

மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டுமென முதல்–அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அதற்கு ஏற்ப தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் ராமநாதபுரம் ஆஸ்பத்திரியில் மருத்துவ கல்லூரி அமைவது உறுதி. ராமநாதபுரம் நகர் பகுதியில் அச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரையிலான சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்