புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்ய முதல்-அமைச்சரிடம் பேசி நடவடிக்கை அமைச்சர் தகவல்

புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்ய முதல்-அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

Update: 2018-12-04 22:45 GMT
கறம்பக்குடி,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் மழையூர் துணை மின் நிலையங்களை அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், கருப்பணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்ட கஜா புயலால் 47 ஆயிரத்திற்கும் அதிகமான மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டன. புயலால் பாதிக்கப்பட்டு உள்ள மாவட்டங்களில் மின் சீரமைப்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை நகர் பகுதியில் 100 சதவீதம் மின் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. கிராம பகுதியில் 80 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது.

இதேபோல தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் நகரில் முழுவதுமாக மின் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. கிராம பகுதியில் 40 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கிராம பகுதியில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினத்தில் வேதாரண்யம் பகுதியில் மட்டும் மின்சாரம் வழங்க வேண்டி உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஒரு வாரத்திற்குள் 100 சதவீதம் மின் வினியோகம் செய்யப்படும்.

வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து பணிபுரியும் மின் பணியாளர்களுக்கு தகுந்த பணி பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதையும் மீறி ஒரு சில விபத்துகள் நடந்து உள்ளன. விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மின் ஊழியர்களுக்கு தமிழக முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு இன்று(புதன்கிழமை) வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

இந்த மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது அரசின் கொள்கை முடிவு. எனினும், இயற்கை பேரிடர் காலங்களில் இவர்களது பணியை நாங்கள் கண்கூடாக பார்த்து வருகிறோம். எனவே இவர்களின் தினக்கூலியை உயர்த்தி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்