இழப்பீட்டு தொகை வழக்குவதில் தாமதம்: ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவு

பரமக்குடி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-12-04 22:58 GMT

பரமக்குடி,

பரமக்குடி தாலுகா பார்த்திபனூர் செட்டியார் தெருவை சேர்ந்தவர் ஹைதர் அலி(வயது 59). இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் இடம் கள்ளிக்குடி கிராமத்தில் இருந்தது. அதை ஆதிதிராவிட மக்களுக்கு குடியிருப்பு வீடுகள் கட்டிக்கொடுப்பதற்காக ஆதி திராவிட நலத்துறை சார்பில் 1991–ம் ஆண்டு வாங்கியுள்ளனர். அப்போது ஒரு சென்ட் ரூ.30 வீதம் ஹைதர் அலிக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தனக்கு ஒரு சென்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் வழங்க வேண்டுமென கேட்டு 1993–ம் ஆண்டு பரமக்குடி சப்–கோர்ட்டில் ஹைதர் அலி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி ஒரு சென்டுக்கு ரூ.600 வீதம் வழங்க உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து ஆதிதிராவிட நலத்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஹைதர் அலிக்கு ஒரு சென்டுக்கு ரூ.1,200 வீதம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் ஏற்கனவே பரமக்குடி சப்–கோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி ஒரு சென்டுக்கு ரூ.600 வீதம் வங்கி மூலமாக ஹைதர்அலிக்கு ஆதிதிராவிடர் நலத்துறையினர் வழங்கினர். இந்த பணம் போதாது எனக்கூறி சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி மீதமுள்ள ரூ.600 வீதம் இழப்பீடு தொகை வழங்க வேண்டுமென மீண்டும் ஹைதர்அலி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ரூ.12 லட்சத்து 86 ஆயிரத்து 129 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். ஆனால் இதுவரை இழப்பீட்டு தொகை வழங்கப்படாமல் உள்ளது. கோர்ட்டு ஊழியர்கள் பலமுறை அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்தபோது, அலுவலகத்தில் இருந்தவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் இழப்பீடு தொகையினை வழங்கி விடுவதாக உறுதி கூறி திருப்பி அனுப்பி வந்தனர். இதனிடையே மீண்டும் பரமக்குடி சப்–கோர்ட்டில் ஹைதர் அலி இதுகுறித்து முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி வெங்கடேசன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதைதொடர்ந்து நேற்று கோர்ட்டு ஊழியர்கள் பரமக்குடி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை ஜப்தி செய்ய அங்கு சென்றனர். அப்போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் ஜப்தி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்