ஆட்டோவில் அதிக கட்டணம்: போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் முறையிட்ட பொதுமக்கள்

போலீசாரின் நடவடிக்கையால் ஆட்டோவில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி, போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் முறையிட்டனர்.

Update: 2018-12-04 22:15 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலையில் மாசிலாமணிபுரம் பகுதியில் ரெயில்வே தண்டவாளம் செல்கிறது. இதில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. எனவே பொதுமக்களுக்கு நேரம் வீணாகிறது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் கடுமையாக அவதிப்படுகின்றனர்.

குறித்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகத்துக்கு செல்ல முடிவதில்லை. இதனால் மாசிலாமணிபுரம், பாலகிருஷ்ணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்ல ஆட்டோக்களை தான் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து பாலகிருஷ்ணாபுரம் செல்வதற்கு கட்டணமாக ஒரு பயணிக்கு ரூ.10 வீதம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக ரூ.20 வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆட்டோ டிரைவர்களிடம் பொதுமக்கள் கேட்டபோது, அதிக அளவு பயணிகளை ஏற்றினால் போக்குவரத்து போலீசார் ஆட்டோக்களை பறிமுதல் செய்கின்றனர். மேலும் அபராதமும் விதிக்கின்றனர். இதனால் குறைவான பயணிகளை ஏற்றிக்கொண்டு ரூ.10 கட்டணம் வசூலித்தால் நஷ்டம் தான் வருகிறது, என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர், திண்டுக்கல் போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு வந்து போலீசாரிடம் இதுகுறித்து முறையிட்டனர்.

ஆனால், போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு தான் ஆட்டோக்களை இயக்க வேண்டும் என்று போலீசார் கூறியதால், பொதுமக்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

மேலும் செய்திகள்