திருவண்ணாமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் மலைபோல் குவியும் குப்பைகள் உடனடியாக அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மலைபோல் குவியும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இந்த குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என நோயாளிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-12-05 23:00 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள கலெக்டர் அலுவலகம் பின் பகுதியில் புறவழிச்சாலை அருகில் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு புறநோயாளிகளாக ஒரு நாளைக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனால் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை புறநோயாளிகள் பிரிவு பரபரப்பாகவே காணப்படும். மேலும் உள்நோயாளிகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகள் புறநோயாளிகள் பிரிவு அருகே உள்ள காலி இடத்தில் குவிக்கப்பட்டு வருகிறது. இதில் மருத்துவ கழிவுகளும், உணவு பொருட்களும், பேப்பர் போன்ற கழிவு பொருட்கள் கிடக்கின்றன.

இந்த குப்பை கடந்த சில நாட்களாக அகற்றபடாமல் மலைபோல் குவிந்து உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள நாய்கள் இந்த குப்பையில் உள்ள கழிவுகளை தின்று அங்கும், இங்கும் திரிகின்றன.

இவ்வாறு அகற்றப்படாமல் உள்ள குப்பைகளால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. நோய் தொற்றினால் சிகிச்சைக்காக வரும் மக்கள் மருத்துவமனை வளாகமே இவ்வாறு உள்ளதை கண்டு வேதனை அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மருத்துவமனையில் தேங்கி கிடக்கும் குப்பையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


அதேபோல் மருத்துவமனை வளாகத்தின் வெளியில் சாலையின் இருபுறத்திலும் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடைகள் குப்பை கூளங்களாக காட்சி அளிக்கிறது. இதனால் நிழற்குடைகளை மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

மேலும் அந்த இடத்தில் பஸ்களும் நிற்காமல் செல்வதால் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். அந்த நிழற்குடைகள் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும், ஆம்புலன்ஸ்கள் நிறுத்தும் இடமாகவும் மாறியுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்