மாவட்டத்தில் இரவில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று இரவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-05 22:30 GMT
நாமக்கல், 

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் தாசில்தார் அலுவலக வளாகத்தில் நேற்று இரவு முழுவதும் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். வட்டத் தலைவர் செந்தில்கண்ணன் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் பிரகாஷ் வரவேற்று பேசினார்.

கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும். காலிப்பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இணையதள சேவையை சிறப்பாக செயல்படுத்த தரமான கணினியை வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாவட்ட மாறுதல்களை ஒரே அரசாணை மூலம் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.

மேலும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 21 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதேபோல் அடுத்த கட்ட போராட்டமாக வருகிற 7-ந் தேதி ஒருநாள் விடுப்பு எடுத்து நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் நாமக்கல் வட்டாரத்தில் பணி புரிந்து வரும் 50 கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றதாக சங்கத்தின் மாவட்ட செயலாளர் பழனிசாமி கூறினார். இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தாசில்தார் அலுவலகங்களிலும் அந்தந்த வட்டார கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாவும் அவர் கூறினார். முடிவில் வட்ட பொருளாளர் ராமன் நன்றி கூறினார்.


ராசிபுரம் வட்டத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணி முதல் தங்கியிருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டத்திற்கு ராசிபுரம் வட்ட தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் உதயகுமார், பொருளாளர் மணிகண்டன், மகளிர் அணி செயலாளர் கீதா உள்பட 17 ஆண், 10 பெண் உள்பட 27 பேர் தர்ணாவில் கலந்துகொண்டனர்.

பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் பரமத்தி வேலூர் வட்ட செயலாளர் சங்கர் தலைமையில் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு தாசில்தார் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று இரவு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்