திருப்பரங்குன்றத்தில் ரெயில் மோதி அய்யப்ப பக்தர் பலி; தொடரும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருப்பரங்குன்றத்தில் ரெயில் மோதி நாமக்கல்லை சேர்ந்த அய்யப்ப பக்தர் உயிரிழந்தார். தொடரும் உயிரிழப்பு சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2018-12-05 22:00 GMT
திருப்பரங்குன்றம்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா உருவத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 48). இவர், அந்த பகுதியை சேர்ந்தவர்களுடன், மாலை அணிந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு கடந்த 2-ந்தேதி சென்றிருந்தார். பின்னர் அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு அவர்கள் அனைவரும் மதுரைக்கு வந்தனர்.

இந்தநிலையில் மாணிக்கம் மற்றும் அவருடன் வந்த அய்யப்ப பக்தர்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்வதற்கு முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் அனைவரும் அங்குள்ள வெயிலுகந்த அம்மன் கோவில் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர்.

அப்போது மைசூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற ரெயில் மோதி மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்.

இதுகுறித்து தகவலறிந்த மதுரை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோவில் பகுதியில் ரெயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு உயிர்பலி ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. இதனை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் ரெயில்வே நிர்வாகம் உரிய பாதுகாப்பு அளிக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

குறிப்பாக திருப்பரங்குன்றத்தில் வாகனங்கள் நிறுத்த போதிய இடமில்லை. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் சாலையின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, இதுபோன்று பாதுகாப்பற்ற நிலையில் தண்டவாளத்தை கடக்கின்றனர். இதுவும் விபத்து ஏற்பட காரணமாக உள்ளது. இதனை தவிர்ப்பதற்காக, அந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் மழை நீர் தேங்குவதாலும், போதிய வசதிகள் இல்லாததாலும் அதனை மக்கள் பயன்படுத்த மறுக்கின்றனர். இதுபோல், விபத்து நடக்கும் அந்த பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்