புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழுமையாக நிவாரணம் வழங்கப்படும் அமைச்சர் தங்கமணி பேட்டி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் விடுபடாமல் முழுமையாக நிவாரணம் வழங்கப்படும், என அமைச்சர் தங்கமணி கூறினார்.

Update: 2018-12-05 22:00 GMT
எலச்சிபாளையம், 

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 13 பள்ளிகளின் மாணவ, மாணவிகள் 3,200 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.

இதேபோல் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைத்தல், திருச்செங்கோடு கால்நடை மருத்துவமனையில் புதிய கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மற்றும் படைவீடு, வீரக் குட்டை, பொம்மம்பட்டி, வில்லிபாளையம், ஆவல்நாயக்கன்பாளையம், கீழ்ச்சாத்தம்பூர், காளிசெட்டிபட்டி ஆகிய இடங்களில் 7 கால்நடை கிளை நிலையங்களை ரூ.81 லட்சத்து 89 ஆயிரத்து 930 நிதியில் கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்துதல் ஆகிய விழாக்கள் நடந்தன.

இந்த விழாக்களில், தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சுந்தரம், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி, சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். விலையில்லா சைக்கிள்களை மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினர்.

பின்னர் அமைச்சர் பி.தங்கமணி அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் விடுபடாமல் முழுமையாக நிவாரணம் வழங்கப்படும். ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். பட்டுக்கோட்டை, வேதாரண்யம் பகுதிகளில் 45 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம் அடைந்ததில் 20 ஆயிரம் மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ளவற்றை ஒரு வார காலத்திற்குள் சீரமைக்க உள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

அமைச்சர் சரோஜாவிடம் மாற்றுத்திறனாளிகளை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை என்ற தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளான ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம், கூடுதல் ஆணையர் நியமனம், மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டங்களில் திருத்தம் ஆகிய கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததன் அடிப்படையில்தான் போராட்டத்தை கைவிட்டு அரசு நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொண்டனர். இம்மாத இறுதியில், அவர்களை அழைத்து கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்