சேலத்தில் மூதாட்டி வீட்டில் 50 பவுன் நகை திருட்டு தொழிலாளர்களிடம் போலீஸ் விசாரணை

சேலத்தில் மூதாட்டி வீட்டில் 50 பவுன் நகை திருட்டு போனது குறித்து, அவரது வீட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-12-05 22:30 GMT
சேலம்,

சேலம் மரவனேரி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மனைவி லட்சுமி(வயது 84). இவர்களுக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். சுந்தரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் லட்சுமி, ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள தனது மகன் சத்தியநாராயணன் வீட்டில் வசித்து வந்தார்.

சமீபத்தில் மும்பையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று வந்த மூதாட்டி லட்சுமி, மரவனேரியில் உள்ள வீட்டை சரி செய்து கொடுக்குமாறு மகனிடம் கேட்டுக்கொண்டார். அதன்படி அந்த வீடு சரி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு லட்சுமி தனியாக வசித்து வந்தார். அவருக்கு உதவியாக ஒரு பெண் வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் வீட்டில் லட்சுமி வைத்திருந்த 50 பவுன் நகையை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து அந்த நகை திருடப்பட்டிருக்கலாமோ? என்ற சந்தேகத்தின் பேரில் அவருடைய வீட்டு வேலைக்கார பெண் மற்றும் வீட்டின் அருகில் உள்ள பகுதியில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் கூறும் போது, ‘மூதாட்டி லட்சுமி வீட்டில் இருந்த 50 பவுன் நகை மாயமாகி உள்ளது. அவர் நகையை வேறு எங்கேயாவது மறந்து வைத்துவிட்டாரா? அல்லது அந்த நகை திருட்டு போனதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்‘ என்றனர்.

மேலும் செய்திகள்