நிட்டிங் நிறுவனங்கள் வேலை நிறுத்தம்: ரூ.400 கோடி உற்பத்தி பாதிப்பு

திருப்பூரில் உள்ள நிட்டிங் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் ரூ.400 கோடி அளவிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-12-05 22:45 GMT
திருப்பூர்,

திருப்பூருக்கு உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான நிட்டிங் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நிட்டிங் பணிகளுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை தொடர்ந்து, பணிக்கான கட்டணத்தை நிட்டிங் நிறுவனத்தினர் உயர்த்தியுள்ளனர். இந்த கட்டண உயர்வை ஏற்று கொண்ட பெரும்பாலான ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் அந்த கட்டணத்தை செலுத்தி பணிகளை செய்து வந்தாலும், பல நிறுவனத்தினர் புதிய கட்டணத்தை ஏற்க மறுத்து வருகின்றனர்.

இதனால் உயர்த்தப்பட்ட கட்டணத்தை தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நிட்டிங் சங்கங்களான நிட்மா, சிம்கா உள்ளிட்ட சங்கங்கள் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதன்படி நேற்று காலையில் இருந்து இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

இதனால் காலையில் இருந்தே திருப்பூரில் உள்ள பெரும்பாலான நிட்டிங் நிறுவனங்கள் இயங்கவில்லை. தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அவசர கதியில் நிட்டிங் பணிகளை முடிக்க வேண்டியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வேலை நிறுத்தத்தால் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தினரின் நிட்டிங் பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் ரூ.400 கோடி வரை உற்பத்தி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

மேலும், கோரிக்கையை நிறைவேற்ற தொழில்துறையினருடன் இணைந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொடர்ந்து 2-வது நாளாக இன்றும்(வியாழக்கிழமை) வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் நிட்டிங் சங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்