போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.104 கோடியில் வேலூர், குடியாத்தம் புறவழிச்சாலைகள் 4 மேம்பாலங்களும் கட்டப்படுகிறது

ரூ.104 கோடியில் வேலூர் மற்றும் குடியாத்தம் பகுதியில் புறவழிச்சாலைகள் அமைக்கப்படுகிறது. மேலும் 4 மேம்பாலங்களும் கட்டப்படுகிறது என கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-06 22:30 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் வேலூர் தேசிய நெடுஞ்சாலை 2016-17-ம் ஆண்டு திட்டத்தில் மங்களூர் - விழுப்புரம் சாலையை அகலப்படுத்தவும், வேலூர் மற்றும் குடியாத்தம் நகர்புறங்களில் மக்கள் நடமாட்டம் மற்றும் குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு ரூ.104 கோடி மதிப்பில் சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதற்குரிய நில எடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் புறவழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் சுமார் 7 கிலோ மீட்டர் நீளத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த புறவழிச்சாலை, மங்களூர்-விழுப்புரம் சாலையில் குடியாத்தம் நகருக்கு முன்பாக இடதுபுறம் பிரிந்து நெல்லூர்பேட்டை, சீவூர், பாக்கம், பிச்சானூர், கொண்டசமுத்திரம் மற்றும் சேத்துவண்டை கிராமங்கள் வழியாக சென்று காட்பாடி செல்லும் சாலையில் இடது புறம் இணைகிறது.

அதேபோல் வேலூர் புறவழிச்சாலை 20.7 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட உள்ளது. இப்புறவழிச்சாலை, காட்பாடி சாலையில் லத்தேரி நகருக்கு முன்பாக வலதுபுறம் பிரிந்து லத்தேரி, அன்னங்குடி, திருமணி, சோழமூர், கொத்தமங்கலம், பொய்கை, புத்தூர், தெள்ளூர், சேக்கனூர், அரியூர், பென்னாத்தூர், சாத்துமதுரை, நெல்வாய் கிராமங்கள் வழியாக சென்று மங்களூர்-விழுப்புரம் சாலையில் உள்ள நெல்வாய் பகுதியில் இணைகிறது.

வேலூர் புறவழிச்சாலையில் பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலமும், லத்தேரி அருகிலும், சாத்துமதுரை அருகிலும் ரெயில்வே மேம்பாலங்கள், ராணிப்பேட்டை - கிருஷ்ணகிரி 6 வழிச்சாலையில் பொய்கை அருகில் ஒரு மேம்பாலம் மற்றும் சிறிய வாகன மேம்பாலம் 4-ம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புறவழிச்சாலை அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. பொதுமக்களுக்கு பாதிப்பு வராமல் இருக்க மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த 2 புறவழிச்சாலைகள் மூலம் வேலூர், காட்பாடி, குடியாத்தம் ஆகிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், நேரம், எரிபொருள் விரயமும், சாலை விபத்துகளும் குறைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்