திருவாரூரில் கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி

திருவாரூரில் நேற்று கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

Update: 2018-12-06 22:45 GMT
திருவாரூர்,

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக திருவாரூரில் விட்டு, விட்டு மழை பெய்தது. அவ்வப்போது வெயிலின் தாக்கமும் இருந்தது.

இந்த நிலையில் நேற்று திருவாரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் விடிந்ததே தெரியவில்லை. காலை 7.30 மணி வரை திருவாரூர் நகரம் முழுவதும் பனி மூட்டமாக காட்சி அளித்தது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு சாலையில் பனி படர்ந்து இருந்ததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். பனியின் தாக்கத்தை சமாளிப்பதற்காக வாகனங்களில் முகப்பு விளக்குகள் ஒளிர விடப்பட்டிருந்தன.

பனிப்பொழிவுடன் குளிர் காற்றும் வீசியது. திருவாரூர் தியாகராஜர் கோவிலின் மேலவாசல் கோபுரத்தை பனி போர்வை மூடி இருந்தது. அதேபோல கமலாலய குளமும் பனியால் மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக குளத்தின் நடுவே உள்ள நாகநாதர் கோவில் மங்கலாக காட்சி அளித்தது. இதை நடைபயிற்சி சென்றவர்கள் ரசித்து பார்த்தனர்.

கடந்த சில நாட்களாக மழையும், வெயிலும் மாறி மாறி இருந்த நிலையில் திடீரென பனி கொட்டியதால் திருவாரூர் நகரம் நேற்று காலை ரம்மியமாக காட்சி அளித்தது. 7.30 மணிக்கு பின்னர் சூரியன் சுட்டெரிக்க தொடங்கியதும், பனி படலம் படிப்படியாக விலகியது.

மேலும் செய்திகள்