பாபர் மசூதியை அதே இடத்தில் மீண்டும் கட்டக்கோரி நெல்லையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் கடைகள் அடைப்பு-ஆட்டோக்கள் ஓடவில்லை

பாபர் மசூதியை அதே இடத்தில் மீண்டும் கட்டக்கோரி நெல்லையில் முஸ்லிம்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலப்பாளையத்தில் கடைகள் அடைக்கப்பட்டன.

Update: 2018-12-06 22:00 GMT
நெல்லை, 

பாபர் மசூதியை அதே இடத்தில் மீண்டும் கட்டக்கோரி நெல்லையில் முஸ்லிம்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலப்பாளையத்தில் கடைகள் அடைக்கப்பட்டன.

த.மு.மு.க.

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி முஸ்லிம் கட்சிகள், அமைப்புகள் சார்பில் நெல்லையில் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கோவை சாதிக் அலி பேசினார். இதில் மாவட்ட செயலாளர் அலிப் ஏ.பிலால், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜமால், துணை தலைவர் ஏர்வாடி முகைதீன், துணை செயலாளர்கள் ரசூல், அஜீஸ், முகமது யாசீர், செய்யது ஜாவித், அப்துல், ஷேக் மைதீன் மற்றும் ஜாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்தும், பாபர் மசூதியை அதே இடத்தில் கட்டித்தர வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி

எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மேலப்பாளையம் சந்தை திடலில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட தலைவர் கனி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் அபுதாகீர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, சவுகத் அலி உஸ்மானி, வக்கீல் ராஜன், தேசிய பெண்கள் முன்னணி துணை தலைவர் பாத்திமா ஆலிமா உள்ளிட்டோர் பேசினர்.

இதில் அகில இந்திய இமாம் கவுன்சில் மாநில துணை தலைவர் மீரான் அன்வாரி, மாவட்ட செயலாளர் ஹயாத் முகமது, வக்கீல் அணி இணை செயலாளர் முகமது ஷபி உள்பட ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் திரளாக கலந்து கொண்டனர்.

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில பொருளாளர் அபுதாகீர் கூறுகையில், “பாபர் மசூதி இடிக்கப்பட்டு 26 ஆண்டுகள் கடந்து விட்டது. பாபர் மசூதியை இடித்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படவில்லை. மீண்டும் அதே இடத்தில் மசூதி கட்டித்தரப்படும் என்ற வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. நீதிக்காக எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும்” என்றார்.

த.ம.ஜ.க. ரத்ததானம்

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பேச்சிமுத்து முகாமை தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

நிகழ்ச்சியில் செய்தி தொடர்பாளர் ஜமால், பொருளாளர் ஜாபர், இளைஞர் அணி அஜீஸ், மாணவர் அணி நயினார், மீனவர் அணி தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடைகள் அடைப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மேலப்பாளையத்தில் நேற்று பஜார் திடல், கடை வீதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. இதேபோல் ஆட்டோ, கார்களும் ஓடவில்லை. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்