ஈஞ்சம்பாக்கத்தில் அம்மா உணவகத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தட்டு ஏந்தி நூதன போராட்டம்

ஈஞ்சம்பாக்கத்தில் அம்மா உணவகத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கையில் தட்டு ஏந்தி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-06 23:00 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அம்மா உணவகம் மற்றும் கழிவறை கட்டப்பட்டு உள்ளது. இந்த இடம் வனத்துறைக்கு சொந்தமான சதுப்பு நிலத்தில் இருப்பதாகவும், இதனால் பறவைகள் பாதிக்கப்படுவதாகவும் சேகர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து அம்மா உணவகத்தை இடித்து அகற்றுவதற்காக நேற்று காலை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு வந்தனர்.

தட்டு ஏந்தி நூதன போராட்டம்

இதுபற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அங்கு திரண்டு வந்து அம்மா உணவகத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

அப்போது பொதுமக்கள், அம்மா உணவகம் முன்பு தரையில் அமர்ந்து, கையில் தட்டு ஏந்தி, ‘சோறு போடு, சோறு போடு’ என கோஷமிட்டபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு சென்னை மாநகராட்சி சுகாதார துறை துணை ஆணையர் மதுசூதன ரெட்டி, நீலாங்கரை போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசலு, சோழிங்கநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அரவிந்த ரமேஷ், நீலாங்கரை இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்ளிட்டோர் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசினார்கள்.

இடிக்க மாட்டோம் என உறுதி

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறும்போது, “கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் இந்த பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசு சார்பில் சாலை, குடிநீர், தெரு விளக்கு வசதிகள் அமைத்து தரப்பட்டு உள்ளது. குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டையும் உள்ளது. எங்களுக்கு பட்டா வழங்க கோரி மனு கொடுத்து உள்ளோம்.

இந்த பகுதியில் இருந்து எங்களை அகற்றும் நோக்கில் முதல்கட்டமாக அம்மா உணவகத்தை அகற்ற அதிகாரிகள் முயற்சி செய்கிறார்கள். நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு அம்மா உணவகம்தான் கைகொடுக்கிறது. அதை நம்பிதான் உள்ளோம். எனவே அம்மா உணவகத்தை அகற்றினால் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.

இதையடுத்து அம்மா உணவகத்தை இடித்து அகற்றமாட்டோம் என்று மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்