பழனி பகுதியில் மழை: தொட்டிமடை நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து

பழனி பகுதிகளில் பெய்த மழை காரணமாக தொட்டிமடை நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

Update: 2018-12-06 22:15 GMT
நெய்க்காரப்பட்டி,

பழனியை அடுத்த சண்முகம்பாறையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தொட்டிமடை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு ரசிப்பார்கள்.

சிலர் நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர் தேங்கும் இடங்களுக்கு சென்று ஆனந்த குளியலும் போட்டுச்செல்வார்கள். கடந்த சில மாதங்களாக பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைப்பொழிவு இல்லை. இதனால் நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கொடைக்கானல் மற்றும் பழனி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தொட்டிமடை நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக வறண்டு கிடந்த நீர்வீழ்ச்சியில் தற்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது மகிழ்ச்சியளிக்கிறது.

மலைகளில் உள்ள மூலிகைகளுடன் கலந்து, இந்த நீர் வருவதால் அதனை பாட்டில்களிலும், குடங்களிலும் எடுத்துச்சென்று குடித்து வருகிறோம். இதன் காரணமாக எங்களால் புத்துணர்ச்சியுடன் விவசாய பணிகளில் ஈடுபட முடிகிறது என்றனர்.

மேலும் செய்திகள்