காப்பீடு செய்த பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்காததால்: அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம்

காப்பீடு செய்த பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்காததால் அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-06 22:00 GMT
போடிபட்டி,

இயற்கை பேரிடர், பூச்சித்தாக்குதல், வறட்சி, வெள்ளம் போன்ற பல்வேறு காரணிகளால் பயிர்சேதம் ஏற்படும் சூழ்நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயிர்கடன் பெறும் விவசாயிகள் கட்டாயமாகவும், மற்ற விவசாயிகள் விருப்பத்தின் பேரிலும் இணைந்து கொள்ளலாம். இந்த நிலையில் கடந்த 2016-2017 ம் ஆண்டு காலக்கட்டத்தில் பயிர்காப்பீடு செய்து, பயிரிழப்பு ஏற்பட்ட பல விவசாயிகளுக்கு இதுவரை பயிர்காப்பீடு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இழப்பீடு கோரும் விவசாயிகள் பெயர் பட்டியலும், தனியார் காப்பீடு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டியதாக கூறும் விவசாயிகள் பெயர்பட்டிலும் வேறுவேறாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இழப்பீடு கோரும் விவசாயிகள் குறித்த விபரங்களை சரிபார்க்கும் விதமாக உடுமலையில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கூட்ட அரங்கில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு உடுமலை, மடத்துக்குளம், வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) அரசப்பன், மடத்துக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வெங்கடாசலம், உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கடாச்சலபதி மற்றும் தனியார் காப்பீடு நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகளுக்கான இழப்பீடு தொகை வழங்கப்படாமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். பின்னர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பயிர்காப்பீடு தொகை செலுத்திவிட்டு, இழப்பீடு தொகை கிடைக்காமல் மாதக்கணக்கில் அலைகிறோம். கோட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் மனு கொடுத்துவிட்டோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. ஒவ்வொரு முறையில் ஆதார்நகல், வங்கி கணக்குநகல், சிட்டாநகல் என அனைத்து விபரங்களையும் வாங்குகிறார்கள். ஆனால் இழப்பீடுதான் கிடைக்கவில்லை. விரைவில் இழப்பீடு வழங்கவில்லை என்றால் வீதியில் இறங்கி போராடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு காப்பீடு கிடைக்காத நிலையில், காப்பீட்டு நிறுவனம் மாவட்ட அளவில் 253 விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்க வேண்டி இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் மடத்துக்குளம், உடுமலை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இழப்பீடு கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். எனவே விவசாயிகளின் நலன் கருதியே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாவது அதிகாரிகள்தான். இருந்தாலும் விவசாயிகளுக்கான காப்பீடு தொகை கிடைக்க அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதி விவசாயிகளிடம் இருந்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்