தவளக்குப்பம் அருகே, நள்ளிரவில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை

தவளக்குப்பம் அருகே நள்ளிரவில் சாப்ட்வேர் என்ஜினீயரின் வீட்டில் புகுந்த கொள்ளைக்கும்பல் தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மேலும் தப்பிச் செல்லும்போது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியையும் பறித்துக்கொண்டு தப்பினர்.

Update: 2018-12-07 22:45 GMT

பாகூர்,

தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் பங்கஜம் நகரைச் சேர்ந்தவர் பலராமன். இவருடைய மனைவி அஞ்சலாதேவி இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் 2 மகன்கள் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகின்றனர். 3–வது மகன் முரளி சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். பலராமன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் அஞ்சலா தேவி தனது மகன் முரளியுடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அஞ்சலா தேவி வீட்டின் கீழ் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். சாப்ட்வேர் என்ஜினீயர் முரளி தனது மனைவியுடன் வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தார்.

நள்ளிரவில் 3 பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டிலிருந்த 3 பீரோக்களின் பூட்டை உடைத்து பார்த்தனர். ஆனால் அதில் நகையோ, பணமோ இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் அந்த கொள்ளைக்கும்பல் வீட்டின் பூஜை அறைக்குள் புகுந்தது.

அங்கிருந்த பீரோ லாக்கரை உடைத்து அதில் இருந்த 12 பவுன் தங்க நகைகள், 40 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் அந்த கும்பல் வீட்டில் இருந்து வெளியேறினர். அப்போது வீட்டின் வராண்டாவையொட்டி தூங்கிக் கொண்டிருந்த அஞ்சலா தேவி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்தனர்.

அப்போது திடுக்கிட்டு விழித்த அஞ்சலா தேவி ‘‘திருடன்... திருடன்...’’ கூச்சலிட்டார். தாயாரின் அலறல் சத்தம் கேட்டவுடன் முரளி மாடியில் இருந்து கீழே இறங்கி வருவதற்குள் கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்கமிருந்த வயல் வெளியில் புகுந்து நகை, பணத்துடன் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த துணிகர கொள்ளை குறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து புதுச்சேரி மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகீம், தவளக்குப்பம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீஸ் துறை கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளையர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்