முன்னாள் ராணுவ வீரரின் மகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் கலெக்டர் அன்பழகன் பேச்சு

முன்னாள் ராணுவ வீரரின் மகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.

Update: 2018-12-07 23:00 GMT
கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான நிதி சேகரிப்பு நிகழ்ச்சி, தேநீர் விருந்து மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களின் குடும்பத்தை சார்ந்த 9 பேருக்கு கல்வி நிதியுதவி, திருமண நிதியுதவி, வங்கி கடன் வட்டி மானியம், ஈமச்சடங்கு நிதியுதவி என மொத்தம் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 508-க்கான காசோலைகளை அவர் வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், நமது தாய்த்திருநாட்டின் பாதுகாப்பு பணிக்காக பகல், இரவு பாராது, சுக, துக்கம் பாராது, ஓய்வறியாது அரும்பணியாற்றியவர்கள் ராணுவ வீரர்கள். அந்த வகையில் நான் மாவட்ட கலெக்டர் என்பதைவிட, முன்னாள் ராணுவ வீரரின் மகன் என்பதையே பெருமையாக கருதுகிறேன். ஆயிரம் தொழில்கள் செய்யலாம். ஆனால் ராணுவத்தில் பணிபுரிவது வேறு. அதன் மூலம் ஒழுக்கம் உருவாகிறது. அது கடைசிவரை நம்முடன் வருகிறது. முன்னாள் ராணுவத்தினர் தங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். முடிந்தால் அவர்களை ராணுவத்திலும் சேர்க்க வேண்டும். எனது மகனையும், ராணுவ கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன், என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) தமிழ்ச்செல்வி, வேளாண் இணை இயக்குனர் ஜெயந்தி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி பரிமளாதேவி, முன்னாள் படைவீரர் நல அலுவலக நல அமைப்பாளர் வீரபத்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கரூர் அரசு கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவர்கள் சார்பிலான கொடி நாள் நிதி வசூலை கலெக்டர் தொடங்கி வைத்தார். அப்போது பஜாரில் இருந்த வணிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மனமுவந்து நிதி அளித்தனர். அப்போது நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் செந்தில்குமார், மணிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்